புதுடெல்லி: குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ரூ.251 விலையில்,  'ஃப்ரீடம் 251'  என்ற பெயரில் ஸ்மார்ட் போன் வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்தது. வெறும் 251 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் சாத்தியமா? நம்பவே முடியவில்லை என்று பலர் குரல் கொடுத்தனர். ஆனால் நம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கரே ‘ஃப்ரீடம் 251’ என்கிற பெயரில் அதை அறிமுகப்படுத்தியபோது எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

இத்தனைக்கும் இந்த போனை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என்று ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் தெரிவித்து இருந்தாலும், போட்டிப் போட்டுக் கொண்டு கோடிக்கணக்கானோர் மலிவு விலை போனை வாங்குவதற்காக முன்பதிவு செய்தனர், பலர் இதற்காக பணமும் செலுத்தினர். இந்த போன் வாங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே,  அந்த நிறுவனத்தின் வலைதளம் ஸ்தம்பித்துப் போனது. அதாவது, ஒரு நொடிக்கு ஆறு லட்சம் ‘ஹிட்’கள் பதிவாகி இருக்கிறது. இது கூகுளின் ஒரு நொடியின் ஹிட்டைவிட அதிகம். 

இந்த போன் தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை எல்லாம் திரும்ப அளிப்பதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் அசோக் சதாதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்கில் இந்த வார இறுதிக்குள் வரவு வைக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குநர் மோகித் கோயல் கூறும்போது, ''குறைந்த விலை போனை பெறுவதற்காக இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இனி, போனுக்காக வாடிக்கையாளர்களிடம் பணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பொருளைப் பெற்றுக் கொண்டப் பின்னர் பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மட்டுமே போன் விற்பனை செய்யப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top